அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

திருக்கோயில் பற்றிய குறிப்பு

 • கோயில் - சமயபுரம் - கண்ணனூர்
 • அம்மன் - அருள்மிகு மாரியம்மன்
 • தீர்த்தம் - பெருவளைவாய்க்கால், தெப்பக்குளம்
 • தலமரம் - வேம்பு
 • தனிச்சிறப்பு - பிரார்த்தனைத்தலம்

கோயில் சிறப்பு அம்சங்கள்

சக்தி தீர்த்தம்

தென்னகத்தின் பெருமைமிக்க காவேரியின் உபநதியான பெருவளைவாய்க்கால் - புனித சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலின் தெற்கே தேரோடும் வீதியின் தென்புறத்திலுள்ளது தான் புகழ்பெற்ற இத்தீர்த்தமாகும். இதன் படித்துறையில் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கபிரதட்சணம் செய்யும் பக்தர்கள், இங்கு நீராடி வழிபாடு மேற்கொண்ட பின்னரே, பிராகாரத்தில் அங்கபிரதட்சணத்தை செய்து முடிப்பர். இங்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், ஆடி 18 தீர்த்தவாரியும் வெகுசிறப்பாக நடைபெறுகின்றன. அது சமயம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் இத்தீர்த்தத்தில் நீராடி மகாமாரியின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

மகமாயி தீர்த்தம்

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் வடமேற்கே, திருச்சி சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு, இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜயநகர நாயக்கர் காலத்தில் இக்குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப்பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பான கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்றிருப்பதையும் காண முடிகிறது. இத்திருக்குளத்திற்கு பெருவளைவாய்க்கால் வழியாக நீர்கொண்டு வரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர் வழிப்போக்கும், நிலத்தடி நீர் வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். பிற்காலங்களில் மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்போற்சவபெருவிழா கொண்டாடப்படுகின்றது. இங்கு தைப்பூசத்திற்கு முதல் நாளும் சித்திரைத் தெப்பமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நாட்களில் அருள்மிகு மாரியம்மன் மேற்கு கரையிலுள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். முற்காலத்தில் அரசர்கள் மேற்பார்வையில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்த இக்குளம் தற்போது திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்திலிருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்திவருவது இன்றளவும் மரபாக இருந்துவருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக்குளத்தில் பலவகையான தீபங்களை மிதக்கவிட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகின்ற ஐதீகமும் உள்ளது.

இத்தீர்த்தம் திருக்கோயிலின் வடமேற்கேயுள்ள வாயுமூலையில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் தீர்த்த வளாகப் பகுதியில் திருக்கோயில் பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகே இக்குளம் அமையப் பெற்றுள்ளது. புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகாமகத்திற்கு முன்பும், கங்காதேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகணம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமகத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தான் வரலாற்று சிறப்புப் பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்குப்பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தம் தன்னகத்தே அதிசய மகாமகதீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரப்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின் போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச் செல்வது வழக்கம்.

ஜடாயு தீர்த்தம்

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோயிலின் தெற்கேயும், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தென் கிழக்கேயும் அமைந்திருப்பது வரலாற்றுச் சிறப்புப்பெற்ற ஜடாயு தீர்த்தமாகும். ஜடாயுவிற்கு இறைவன் முக்தி கொடுத்ததாக கூறப்படும் புகழ்பெற்ற தலம் இதுவே ஆகும். ஜடாயுவின் தாகத்தை தணிக்கவும், இராவணன் சீதையை கடத்திச் சென்ற விபரத்தை இராமனிடம் கூறும்வரை தன் உயிர் பிரியாமலிருக்க ஜடாயு மகேஸ்வரனிடம் வேண்ட, மகேஸ்வரனால் ஏற்படுத்தப்பட்ட இத்தீர்த்தமே ஜடாயு தீர்த்தமாகும். சர்வலோகத்தை காக்க பிரசித்திப் பெற்றதாகவும் இன்றும் வற்றாத நீர்நிலையை கொண்டும் இத்தீர்த்தம் விளங்குகிறது. மேலும் உயிர் பிரிந்த ஜடாயு தன்னுடைய தந்தை தசரதனுக்கு நண்பன் என்பதால் ஜடாயுவிற்கு ஈமக்கடன் களைச் செய்ய இராமன் பூமியில் நீர் ஊற்று ஒன்றினை உண்டாக்கினான், அதுவே ஜடாயு தீர்த்தம் என்பதாயிற்று என்ற மற்றொரு புராண குறிப்பும் இதற்கு கூறப்படுகின்றது.

கங்கை தீர்த்தம்

இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலின் கிழக்கில் அமைந்திருப்பது கங்கை தீர்த்தமாகும். இது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தென் கிழக்கே அமையப் பெற்றுள்ளது. காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் எனச் சென்றுகொண்டிருந்த விக்கிரமாதித்தன் தமது இஷ்டதேவதையான காளிதேவிக்கு நித்தியப்பூஜைகளைச் செய்ய கங்காதேவியிடம் வேண்டினான். கங்கையும் அங்கு சிறப்பாக தோன்றினாள். இதுவே கங்கை தீர்த்தம் எனும் வற்றாத தீர்த்தமாகும். மகிழவனத்து மாகாளி வீற்றிருக்கும் இவ்விடத்திலுள்ள தீர்த்தம் வற்றாத்தன்மைக் கொண்டதாகும். திருமணத் தடைகள், தீராத நோய்கள், பில்லி சூன்யம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஓர் அருமருந்தாகும். மூளைக்கோளாறு, குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்த ஏதுவான அற்புத மருந்தாக இந்த புனித தீர்த்தம் இன்றும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகிறது.

அம்பாளின் அளவிலாக் கருணையினாலும் பேரருளினாலும் இத்தீர்த்தத்தை பயன்படுத்தும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நிலைகளில் நலன் பயப்பதாக அறியப்படுகின்றது. அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இத்தீர்த்தம் ஓர் அருமருந்தாகும். செய்வினை மற்றும் மந்திர சக்தியை இத்திருக்கோயில் தீர்த்தம் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டதாக நம்பப்படுகிறது. புதிதாக கட்டப்படும் அனைத்துத் திருக்கோயில்களிலும் இறைசக்தியை நிலைநிறுத்த இத்தீர்த்தம் மிகப்புனிதமானதாக கருதி எடுத்துச் செல்லப்படுகிறது.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் புனிததீர்த்தம், காவேரியின் உபநதியாக இருப்பதால் குளித்தவுடன் சகலவித பாவங்களும், வியாதிகளும் அம்பாளின் அனுக்கிரகத்தால் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இப்புனித நீரில் அம்பாளின் நாமத்தை மூன்று முறை உச்சரித்து மூழ்கி எழுந்தால், இதுவரை கண்டிராத உள்ளத் தூய்மை, உடல் தூய்மை ஆகியன ஏற்பட்டு புத்துணர்ச்சியை அடைந்து மக்கள் மனநிறைவு பெறுவது கண்கொள்ளா காட்சியாகும்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தல விருட்சம் வேப்பமரமாகும். வேப்பமரம் என்றாலே அது மகாமாரியின் மறுபிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்திக் கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில் நிலைபேறுடையதாக கருதப்படுகிறது. பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இவ்வேப்பமரத்தினடியில் உள்ள புற்றில்தான் ஆயிரம் கண்ணுடையாளின் அழகிய செப்புத் திருமேனி எடுக்கப்பட்டது. தற்போது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சியளித்துக் கொண்டுள்ளாள்.

நலன்பயக்கும் வேப்பமரம் அன்னையின் திருவுருவமாக வணங்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகாமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம் பூவை நெற்றியில் உள்ள வைரத்திலகத்திற்கும் தொடர்புப்படுத்திக்கூறுவர்.

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில் திருச்சிராப்பள்ளி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நகரிலிருந்து 15 வது கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி நகர சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், நகரப்பேருந்துகள் கோயில்வரை வந்து செல்கின்றன.

சமயபுரத்திற்கு கண்ணனூர், கண்ணபுரம், விக்கிரமபுரம், மாகாளிபுரம் என்ற திருப்பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. இவ்வூருக்கு கிழக்கே மருதூரும், தெற்கே வேங்கடத்தான் துறையூரும், வடக்கே போஜேஸ்வரர் திருக்கோயிலும், மேற்கே வெங்கக்குடியும் அமைந்துள்ளன. இத்தலத்திற்கு மாகாளிக்குடி வேங்கடத்தான் துறையூர், மருதூர், பனமங்கலம் ஆகிய சுற்றுக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மிக்க ஈடுபாட்டுடன் தொண்டு செய்கின்றனர்.

கர்நாடகத்தை சேர்ந்த துவார சமுத்திரத்திலிருந்து அரசாண்டு கொண்டிருந்த ஹொய்சாளர் அல்லது போசளர் என்ற மரபினர் கண்ணனூரைத் தலைநகராக கொண்டு 13- ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். இவர்கள் வலிமை குன்றிய பிற்கால சோழ மன்னர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவி செய்தனர். " சோழ ராஜ்ய பிரதிஷ்டாபனாசாரியன் - சோழகுல ஏக ரக்ஷன் " என அழைத்துக்கொண்டனர். போசள மன்னன் வீரசோமசுவரன் (கி. பி 1233 - 67) இந்நகரை அமைத்து இதற்கு விக்கிரமபுரம் என்று அழைத்ததை பெங்களூர் அருங்காட்சியகச் செப்பேடுகள் கூறுகின்றன.

தற்பொழுது கண்ணனூரில் உள்ள போஜேசுவரம் என்று அழைக்கப்படும் சிவன் கோயில் வீரசோமேசுவரனால் கட்டப்பட்டதாகும். போசளீசுவரம் என இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. வீரசோமேசுவரனுக்குப் பின்னர் அவன் மகன் வீரராமநாதன் (1254 - 95) கண்ணனூரிலிருந்து அரசாண்டான். வீரராமநாதனின் அரசாட்சி கண்ணனூர் வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்ந்தது. பின்னர் பாண்டியர்கள் கண்ணனூரைக் கைப்பற்றினர். கண்ணனூரில் முகமதியர் காலத்தில் ஒருபோர் நடந்திருக்கிறது. இச்சண்டை பற்றி வரலாற்று ஆசிரியர் இபின்படூடா வெகு விரிவாகக் கூறுகிறார். போசளமன்னர்களில் கடைசி மன்னனான வீர வல்லாளன் மதுரையை ஆண்ட கியாசுதீன் துக்ளக்குடன் நடந்த போரில் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கண்ணனூர் முகமதியர் வசம் வந்தது. பிறகு விஜயநகர பேரரசின் பிரதானியான கம்பண்ண உடையார் காலத்தில் அவ்வரசின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. பிறகு 18- ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப்போரில் கண்ணனூர் முக்கிய இடம் வகித்தது. ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் நிகழ்ந்த போரில் இராபர்ட் கிளைவ் பிரெஞ்சுப் படைகளை இவ்விடத்தில் முறியடித்து ஆங்கில அரசின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். எனவே கண்ணனூர் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.

அருளாட்சி செய்யும் அன்னையின் இத்திருக்கோயில் காலத்தால் மிகவும் முற்பட்டதாக கருதப்படுகிறது. சோழர்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்ட அம்பாளின் திருத்தலம் விஜய நகர, நாயக்க மன்னர்களின் காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. கிழக்கு நோக்கி அமைந்த இத்திருக்கோயில் மூன்று திருச்சுற்றுகளை உடையதாக விளங்குகிறது. கிழக்கே சன்னதித்தெருவில் விநாயகர் கோயிலும், தெற்கே முருகன் கோயிலும், மேற்கே இராஜகோபாலசாமி கோயிலும், வடக்கில் தேரோடும் வீதியில் விநாயகர் கோயிலும் அமைந்துள்ளன. கிழக்கே தேர் மண்டபத்திலிருந்து திருக்கோயில் முகப்புவரை புதிதாக மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆலய முகப்பிலுள்ள மண்டபம் பார்வதி கல்யாணமண்டபம் என அழைக்கப்படுகிறது.

முதல் கோபுரவாயில் வழியே திருக்கோயிலுக்குள் நுழைந்தால் இரண்டாம் திருச்சுற்றுக்கு வரலாம். இத்திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, தலமரம், வேம்பு, பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வாகன அறைகள், வசந்த மண்டபம், அபிஷேக அம்மன் சன்னிதி, யாக சாலை, தங்கரத மண்டபம் ஆகியவை உள்ளன. பக்தர்களின் வசதிக்காக சுற்று பிராகாரங்களை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இத்திருச்சுற்றில் மக்கள் வேண்டுதல் நிறைவேற பயபக்தியுடன் அங்கப்பிரதட்சணம் செய்துவருகிறார்கள். தங்கத்தேரோடும் பிராகார மண்டபமாகவும் இது விளங்குகிறது.

இரண்டாம் திருச்சுற்று முடிந்து வந்தால் கொடிமரம், பலிபீடம், மாவிளக்கு மண்டபம் ஆகியவற்றை கடந்து கருவறைக்கு செல்லலாம். கருவறைக்குச் செல்லும் வாயிலின் இருபுறமும் துவாசக்திகளின் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றன. அர்த்த மண்டபத்திற்கு முன்புறம் மகாமண்டபத்தில், வடக்குப் புறத்தில் தெற்கு நோக்கி ஆயிரம் கண்ணுடைய அற்புத உற்சவ அம்பாள் சன்னதியும், அதனையடுத்து மகாமண்டப வெளிபுறத்தில் சக்திவாய்ந்த தல காவல் தெய்வமான கருப்பண்ணசுவாமியின் சன்னதியும் உள்ளது.

கருவறையில் மாரியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் கம்பீரமாக காட்சி தருகிறாள். அம்பாள், மாரியம்மன் வடிவெடுத்த திருவுருவங்களில் சமயபுரத்தாள் என்னும் இந்த மாரியம்மன் எழுந்தருளியிருக்கும் இவ்விடமே சக்தி ஆதிபீடமாகும். அம்மன் தலைக்கு மேலே ஐந்து தலை அரவு குடையாக விளங்குகிறது. தங்கக்கிரீடம் திருமுடியில் அணிந்து குங்கும நிற மேனியுடன், நெற்றியில் வைரப்பட்டை ஒளிவீச, கண்களில் அருள் ஒளிவீச, வைரக்கம்மல்களும் மூக்குத்தியும், சூரியன் - சந்திரன் போல ஒளிவீசக் காட்சி தரும் அன்னையின் அற்புதக்கோலம் வர்ணிக்க இயலாது. தனது எட்டுக்கரங்களில் கத்தி, உடுக்கை, தாமரை, திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் தாங்கி இடக்காலை மடக்கி வலக்காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்து, பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்பாலிக்கிறாள். வலக்காலின் கீழே மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு அம்பாள் கோபமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் முகத்திலே தோன்றும் சிரிப்பினாலும், அருட்பொலிவினாலும் நம் துன்பங்கள் கரைந்துபோகும் வண்ணம் அருள்பாலிக்கிறாள்.

கருவறையைச் சுற்றி ஒரு திருச்சுற்று உள்ளது. இதனை உள்பிராகாரம் என்பர். இத்திருச்சுவற்றில் கருவறையைச் சுற்றித் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு ஏற்றவாறு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இறைவிக்கு குளிர்ச்சியாக இருப்பதற்காக இதில் நீர் நிரப்பும் வழக்கம் இருந்துவருகிறது. கருவறையின் பின்னால் அம்பிகையின் மலர்ப்பாதங்கள் வழிபடப்படுகின்றன.

கருவறையின் இடப்புறம் உற்சவ அம்பாளின் சன்னதி உள்ளது. இதற்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்படுகிறது. சமயபுரம் கோயிலின் வடக்கே காணப்படும் செல்லாண்டி அம்மன் திருக்கோவிலுக்குரிய திருமேனியும் இங்கே நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பெற்று வழிபடப்பெறுவது சிறப்பாகும்.

திருக்கோயில் உற்சவ அம்பாளுக்குத் தினமும் காலை 7.30 மணிக்கு திருக்கோயில் சார்பில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தம் காலை சந்தி முடிந்தவுடன் திருக்கோயில் வடக்கு பிராகாரத்தில் தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள், உடல்நலக்குறைவு உள்ளவர்கள், ம்நோயின் தன்மை குறைந்து, விரைவில் நலம் பெறுகிறார்கள் என்பது கண்கூடு.

இத்திருக்கோயில், தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 46(iii)- படி இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி அவர்களால் நிர்வாகிக்கப்பட்டுவரும் பட்டியலைச் சார்ந்த அறநிலையமாகும்.

இத்திருக்கோயில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி 01.07.1984 முதல், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திடமிருந்து பிரிக்கப்பட்டு தனி நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் 1.) சமயபுரம் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், 2.) இனாம் சமயபுரம், அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில், 3.) மாகாளிக்குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில், 4.) சமயபுரம் அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீ போஜீஸ்வரர் திருக்கோயில், 5.) மாகாளிக்குடி அருள்மிகு கனகாம்பிகை உடனுறை ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் உப கோயில்களாக உள்ளன.

தமிழகத்திலேயே இதுவரை இல்லாத அளவில் மூலவர் தங்க விமான திருப்பணி இந்து சமய அறநிலையத் துறை மூலம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலில் பிரார்த்தனைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கட்டளைகள் மற்றும் கட்டண சேவைகள் நிர்வாக நலன், பொதுமக்கள் நலன் கருதி துவங்கப்பட்டுள்ளன.

இத்திருக்கோயில் சார்பில் ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு அன்பு இல்லம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆதரவற்ற, ஏழை சிறார்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களிலும், திருவிழாக் காலங்களிலும் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக சுமார் 50,000 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் அமாவாசை மற்றும் பௌர்ணமி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பெருகிவரும் பக்தர்களின் வருகைக்காக சுமார் 15,000 சதுர அடியில் மூன்றடுக்கு முடிகாணிக்கை கட்டப்பட்டுள்ளது. அத்துடன் பெருவளை வாய்க்கால் அருகே மிகப்பெரிய நவீன குளியல் மற்றும் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

பக்தர்கள் நலனுக்காக ரூ.10 லட்சம் செலவில் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட குடி நீர் அமைப்பு (R.O.Plant) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு செலுத்தப்படும் அனைத்துவிதமான காணிக்கைகளையும் (உண்டியல் காணிக்கையைத் தவிர) திருக்கோயில் உள்துறை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுமென பக்தர்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருக்கோயில் சுவாமி தரிசனத்திற்கும், சிறப்பு வழி சுவாமி தரிசனத்திற்கும், வெளி நபர்களிடம் தொடர்பு கொள்ளாமல், திருக்கோயிலில் சீட்டு வழங்குமிடம் மற்றும் திருக்கோயில் உள்துறை மேலாளர் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருக்கோயில் உட்புறம் அமைந்துள்ள உள்துறை மேலாளர் அலுவலகத்தில் திருக்கோயில் பற்றிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். வெளி நபர்களிடம் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 15 வது கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி நகரை விமான மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் விரைவில் அடையலாம். திருச்சி நகர சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் திருக்கோயில் வரை வருகின்றன.

இதர திருக்கோயில்கள்

 1. அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், கண்ணனூர்.
 2. அருள் போஜீஸ்வரர் திருக்கோயில், சமயபுரம்.
 3. அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில், இனாம் சமயபுரம்.
 4. அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில், மகாளிக்குடி.
 5. அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், மகாளிக்குடி.
 6. (ஐந்து திருக்கோயில்களும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் உள்ளன.)

  திருச்சிராப்பள்ளி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்தரம் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் மாரியம்மன் திருக்கோயில் வரை செல்லுகின்றன.

  அம்பாளைத் தரிசிப்பதற்கு உகந்த நாட்கள்: செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்.

திருக்கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை (விசேஷ தினங்களில் மாறுதலுக்குட்பட்டவை)